Moneycontrol News

Latest News from Moneycontrol.com

Friday, July 27, 2007

சென்செக்ஸ் என்றால் என்ன?



நீண்ட காலமாக எழுத முடியாததற்கு மிக்க வருந்துகிறேன்! தென்றலும், பங்கு வணிகமும் அவர்களது பணிகளுக்கிடையிலும் தொடர்ந்து எழுதி வருவது மிக்க மகிழ்ச்சித் தருகிறது.

இன்று சென்செக்ஸ்(532) மற்றும் நிஃப்டி(174) தட தடவென பல புள்ளிகளை இழந்துள்ளது. இன்று பல புள்ளிகளை சந்தை இழக்கக்கூடும் என காலையிலேயே பங்குவணிகம் குறிப்பிட்டிருந்தது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது.

சென்செக்ஸ், சென்செக்ஸ் என நிறையக் கேட்டிருக்கிறோம் அது என்ன எனபதை இங்கு பார்ப்போம்

அதுக்கு முன்னாடி இந்தியாவின் பங்கு சந்தை வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.

இந்தியாவின் பங்கு சந்தை வரலாறு 1875-லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது 318 பேர் தலைக்கு ரூ. 1/- கொடுத்து இப்போது பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் என அழைக்கப்படுகிற BSE-யில் உறுப்பினரார்கள்! (இப்போ இவங்க வம்சா வழியெல்லாம் எங்கே இருக்குன்னு தெரியல :) )

1875-லேயே தொடங்கினாலும் ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரியில்ல. 1986 வரைக்கும் பங்கு சந்தையை மதிப்பிடுவதற்கு எந்த குறியீடும் இல்லை. 1986 -லே தான் BSE சென்செக்ஸ் என்ற பங்கு சந்தைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது.
மார்கெட்டில் இருக்கிற 30 பெரிய கம்பெனிகளின் பங்கு விலைகளைப் பொருத்து சென்செக்ஸ் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன! பல கம்பெனிகள் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டாலும் எல்லாமே குறியீட்டெண்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.



30 பெரிய கம்பெனிகளின் பங்குகளைப் பொருத்தே இது அமைவதால் இது BSE 30 குறியீடு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கம்பெனிகளின் பங்கு விலைகளில் மாற்றம் வரும் போது சென்செக்ஸிலும் ஏற்ற இறக்கங்கள் வரும். BSE 30-இல் 30 பங்குகள் 13 விதமான துறைகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை கட்டுமானம், வங்கி, ஆட்டோ மொபைல், டெக்னாலஜி போன்றவைகளாகும். இதைத் தவிர BSE 50, BSE 100 போன்ற குறியீடுகளும் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டன. BSE 50, 100 என்ற எண்கள், எத்தனைக் கம்பெனிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன எனபதைக் குறிக்கிறது.
இதே போல் துறைவாரியான குறியீடுகளும் உள்ளன. உலோகம், வங்கி குறியீடு என.

BSE என்பது Bombay Stock Exchange-யைக் குறிப்பது போல நிஃப்டி என்பது தேசிய பங்கு சந்தையைக் குறிக்கிறது. இதன் தலைமையகம் டெல்லியாகும். இதில் 50 கம்பெனிகள் 24 விதமான துறைகளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.நிஃப்டியும் நிஃப்டி 500, ஜுனியர் என பல குறியீட்டெண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

BSE-க்கு சென்செக்ஸ் எனவும் NSE-க்கு நிஃப்டி என்பதும் பங்கு குறியீட்டெண்ணாகும். இதைத் தவிர கல்கத்தா மற்றும் மெட்ராஸ் பங்கு சந்தைகளும் உள்ளன.

சரி, இது வரை குறியீட்டெண்களைப் பற்றி தெரிந்து கொண்டுவிட்டோம்... எப்படி இந்த 30 நிறுவணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எதை வைத்து குறியீடு கணக்கிடப்படுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!

Thursday, June 14, 2007

எதற்க்காக பங்கு சந்தையில் ஈடுபடுகிறேன்!

தென்றல் அடிப்படைக் கருத்துகளையும் பங்குவணிகம் டெக்னிக்கலாகவும் எழுதுவதால் மத்தத இங்க சொல்லலாம்னு இருக்கேன்.

முதல ஷேர் மார்கெட்ல எதுக்கு ஈடுபடனுங்கறதுக்கான என்னோட கருத்துக்கள்... பணம் பண்ணுவதற்கு தான். ஆனால் அதுக்கு இது எப்படி சரியான வழி...



1. ரொம்ப பணம் தேவையில்லை... முதலீடா ஒரு வீடோ, நிலமோ வாங்குவதற்கு நமக்கு நிறையப் பணம் தேவைப்படும்... ஆனா இதுக்கு அவ்வளவெல்லாம் தேவையில்லை.



2. பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைக்கு அதிக நேரம் ஒதுக்க தேவையில்லை. ஒரு தொலைபேசியோ, கணிணியும் இன்டர்நெட்டுமோ இருந்தால் போதும்


3. பங்குகளை எளிதில் பணமாக்கும் வசதி (Liquidity)(வாங்குவதற்கும் ஆள் வேண்டும்! :) )


4. இன்னொரு முக்கிய காரணம் - தேசப்பற்று. உண்மைதாங்க, நம்ப நாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாகிறப்ப சந்தையின் ஸ்திரத்தன்மையும் கூட வாய்ப்பிருக்கிறது.

அடுத்தடுத்தப் பதிவுகளில இதெல்லாம் எப்படிங்கறத பார்க்கலாம்!

Sunday, June 3, 2007

பங்கு சந்தை என் பங்குக்கு





ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஷேர், ம்யூட்சுவல் ஃபண்ட் எல்லாம் ஏதோ அன்னிய மொழி வார்த்தையாத் தான் இருந்துச்சு. அப்ப தான் என் cousin ஒருத்தர் ம்யூட்சுவல் ஃபண்ட் பத்தி ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டிருந்தார். சொல்லிட்டு நீ ஏதாவது போட்டு வச்சிருக்கியான்னார். நமக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லிங்க. ஒரு ரூபான்னாலும் அத கோழி அடை காக்கிற மாதிரி பேங்கில போட்டு வச்சு தான் பழக்கம் நமக்கு இது எல்லாம் வேணாம்னு சொன்னேன்.


தெரியலைன்னா சொல்றதையாவது கேட்டிருந்திருக்கலாம் அத ஒரு சூதாட்ட ரேஞ்சுக்கு சொல்ல பார்ட்டி ரொம்ப கடுப்பாயி என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு நாளைக்கு ஒருத்தர் கிட்ட கூட்டிட்டு போறேன் அவருக்கிட்ட பேசுன்னார்...


என்னடா இது அக்கடானு ஞாயித்துக் கிழமை ரிமோட் கன்ட்ரோல் அழுவுற வரைக்கும் டிவிய மாத்து மாத்துனு மாத்திக்கிட்டு பொழுத ஓட்டலாம்னு பாத்தா இவரு இப்படி சொல்லிட்டு போறாரேனு என்னோட வாய நொந்துக்கிட்டு டி.வி. முன்னாடி உக்காந்தா டி.வி.ல அப்பதான் ஒரு டிஸ்கியோட விளம்பரம் ஓடிச்சு! என்னன்னு பாத்தா அட ம்யூட்சுவல் ஃபண்ட் விளம்பரம் தான். என்னடா இங்கியுமானு நினைச்சிக்கிட்டு கூகிளாண்டவரை திறந்து "ம்யூட்சுவல் ஃபண்ட்"னு அடிச்சா ஏகப்பட்ட லிங்க்கு வருது... ஆகா இது தெரியாமாப் போச்சே!


இப்படிக் கொஞ்சமா தேட ஆரம்பிக்க ஏகப்பட்ட புது வார்த்தைக்ள் தெரிய வந்துச்சு! அப்புறம் அதிலேயே ரொம்ப இன்ட்ரெஸ்டாயி பங்கு சந்தை பிதா மகன் வாரன் பஃப்பட் ரேஞ்சுக்கு என்னய கற்பனைப் பண்ணிக்கிட்டு ம்யூட்சுவல் ஃபண்ட் பங்கு சந்தைனு இறங்கி ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கேன். அதனால என்னோட கத்துக்குட்டி அனுபவங்கள சொல்லாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன்... நம்முடைய வலைப்பதிவர்கள் இதெல்லாம் பத்தி எழுத ஆரம்ப்ச்சது வேற உந்துதலா இருந்துச்சு. வரும் நாட்கள்ல எனது அனுபவங்களைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்!!!
இது முழுக்க முழுக்க என் பார்வையும் அனுபவங்களும் மட்டுமே! இதைப் பின்பற்றி யாராவது பங்கு சந்தையிலோ, ம்யூட்சுவல் ஃபண்டிலோ இறங்கி இலாபமோ முக்கியமாக நட்டமோ அடைந்தால் இந்த வலைப்பதிவர் பொறுப்பல்ல! (அப்பா டிஸ்கி போட்டாச்சு)!